Thursday 9 June 2011

காலத்தை பிரயோஜனப்படுத்து



ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். - (எபேசியர் 5: 15-17).

ஒரு மனிதன் தன் விடுமுறை நாளில், மீன் பிடிப்பதற்காக சென்றான். அப்போது ஒரு அழகிய மீன் அவனுடைய தூண்டிலில் சிக்கியது. அதைப் பார்த்து, அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்த மீன் பேச ஆரம்பித்தது,  ‘தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்,  நான் உங்களுடைய மூன்று ஆசைகளை நிறைவேற்றுகிறேன்’ என்று சொன்னது. அப்போது அந்த மனிதன், ‘இல்லை, எனது ஐந்து ஆசைகளை நிறைவேற்று, நான் உன்னை விட்டு விடுகிறேன்’  என்றுக் கூறினான். அதற்கு அந்த மீன், ஷஎனக்கு மூன்று ஆசைகளை நிறைவேற்றதான் சக்தி இருக்கிறது| என்று சொன்னது, அப்போது அந்த மனிதன், ‘இல்லை, எனக்கு நாலரை ஆசைகளையாவது, நிறைவேற்ற வேண்டும்’  என்று திரும்ப பேரம் பேசினான். ‘ஓ, என்னால் மூன்றுதான் முடியும் என்று சொன்னேனே, தயவு செய்து என்னை விட்டுவிடு’  என்று அவனிடம் கெஞ்சியது. ஆனால் அந்த மனிதனோ, ‘சரி, குறைந்த பட்சம் நான்காவது கொடு’  என்று சொல்லி முடிப்பதற்குள் இந்த மீன் அவனது கைகளிலேயே மடிந்துப் போனது. அவன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பேரம் பேசியே நழுவ விட்டான்.

ஒரு வேளை இந்த வாரம் உங்களுக்கு உங்கள் தகுதிக்கு மேல் செய்யும்படியாக, ஒரு வேலை வரலாம், ஆனால், நீங்கள் ஐயோ, என்னால் செய்ய முடியாது என்று நினைக்கலாம், ஒருவேளை நான் செய்யப் போய் தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது? என்று நினைக்கலாம், ஆனால் ஒருவேளை அது வெற்றியாக முடிந்து விட்டால்? சில நல்ல காரியங்களில், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சந்தர்ப்பங்களை நாம் நழுவ விடக் கூடாது. ஜெபித்து, ஞானமாய் அதை முயற்சி செய்ய வேண்டும். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் என்ற வேதம் நமக்கு ஆலோசனை கூறுகிறது.

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் வேதம் நம்மை எச்சரிக்கிறது. நாட்கள் மிகவும் பொல்லாதவைகளாய் இருப்பதால், நாம் நம் ஆத்தும இரட்சிப்பை தள்ளிப் போடக்கூடாது. நாளை ஒருவேளை நமக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்றால், என்ன செய்வோம்? இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2கொரிந்தியர் 6:2) என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஆகவே காலத்தை பிரயோஜனப்படுத்தி, இரட்சிக்கப்படுவோம். நமது கையில் கொடுக்கப்பட்டிருக்கிற சந்தர்ப்பத்தை, தருணத்தை, காலத்தை நாம் வீணாக்காமல், ஞானமாய் அதை பிரயோஜனப்படுத்திக் கொள்ள தேவன் தாமே, கிருபை செய்வாராக!

No comments:

Post a Comment