Thursday 9 June 2011

கிறிஸ்துவுக்குள் பூரண வளர்ச்சி

நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். - (பிலிப்பியர் 3:12).

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டை சேர்ந்த திமான்தஸ் (Timanthes) என்ற வாலிபன் மிகச்சிறந்த ஓவியர் ஒருவரிடம் ஓவியம் கற்று வந்தான். அநேக ஆண்டுகளுக்கு பின் அவன் சுயமாய் ஒரு ஓவியத்தை வரைந்து முடித்தான். அது மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆகவே அதன் முன்பு அமர்ந்து அதன் அழகை ரசித்து கொண்டேயிருக்க ஆரம்பித்தான். இது அநேக நாட்களாக் நடந்து வந்தது. வேறெந்த வேலையும் செய்யமால், எதையும் புதிதாய் கற்று கொள்ளாமல் அந்த ஓவியத்தையே பார்த்து ரசித்து கொண்டிருந்தான். இதை கவனித்து வந்த குரு அந்த ஓவியம் முழுவதையும் பெயிண்ட் அடித்து அலங்கோலமாக்கினார். மறுநாள் அதை பார்த்த வாலிபன் தான் ரசனையாய் வரைந்த ஓவியம் அலங்கோலமாய் இருப்பதை கண்டு கடுங்கோபம் கொண்டு குருவிடம் ஓடினான்.
அவர், 'ஆம் இதை உன் நன்மைக்காகவே செய்தேன். இந்த ஓவியம் உன் வளர்ச்சியை பாதிக்கிறது. நீ புதிய புதிய ஓவியங்கள் வரைந்து இன்னும் வாழ்வில் முன்னேறி, உன் திறமைகளை வளர்த்து கொள்' என்று அறிவுரை கூறினார். அவன் அந்த அறிவுரையை கேட்டு மிகவும் கடினமாக உழைத்து மிக புகழ்பெற்ற பழங்கால ஓவியத்தை வரைந்தான்.
கிறிஸ்தவ வாழ்க்கையும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பூரணமாகி விடுவதில்லை. இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்ற உடன் நாம் பூரண பரிசுத்தர்களாக மாறி விடுவதில்லை. பரிசுத்தத்தை நோக்கி நமது பயணத்தை ஆரம்பிக்கிறோம். ஆகவே தான் அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் 'நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்' என்று எழுதுகிறார். எப்போதுமே நாம் கிறிஸ்தவ வாழ்வில் திருப்தி அடைந்து நின்று விடக்கூடாது. பரிசுத்த்தின் மேல் பரிசுத்தம் அடையவும், பொறுமையிலிருந்து நீடிய பொறுமைக்கும், சாந்தத்திலிருந்து நீடிய சாந்தத்திற்கும், தாழ்மையிலிருந்து மிகுந்த மனத்தாழ்மைக்கும் நேராய் முன்னேறி கொண்டே இருக்க வேண்டும். இன்னும் தேவனிடம் கிட்டி சேர வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் நமக்குள் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
பிரியமானவர்களே, நாம் கிறிஸ்துவை நெருங்க நெருங்க நமக்குள் இருக்கும் சின்னஞ்சிறு குறைகளையும் பாவங்களையும் தேவன் உணர்த்தி காட்டுவார். அதாவது சுத்தமான ஒரு வெள்ளைத்துணியில் ஒரு முடி விழுந்தாலும் கண்டுபிடித்து விடுவோமல்லவா? அதை போல வெளிச்சமாகிய அவரை நெருங்கி கிட்டி சேர சேர நமது சிறு குறைகளையும் அறிந்து அவரிடம் மன்னிப்பிற்கு கெஞ்சுவோம். ஏனென்றால் நமது இலக்கு 'கிறிஸ்துவுக்கு ஒப்பாய்' மாற வேண்டும் என்பதாகவே இருக்கும். வேத வாசிப்பிலும், ஜெபத்திலும், செய்யும் ஊழியத்திலும், கொடுக்கும் காணிக்கையிலும் திருப்தி அடைந்து விட கூடாது. நமது ஓட்டம் ஜெயமாய் முடியும் நாள் வரை நாம் ஆசையாய் பவுலை போல தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.
'நீ எல்லாவற்றிலும் தேறினவனாகி விட்டாய், உன்னை போல தாழ்மையாய் இநத ஆலயத்தில் யாருமில்லை. இத்தனை முறை வேதத்தை வாசித்து விட்டாயே, நீ கைக்கொள்ளாத கட்டளை வேறெதுவும் வேதத்தில் இல்லை' என்பன போன்றவை பிசாசின் தந்திரமே ஆகும். பிசாசின் தந்திரங்களுக்கு எச்சரிக்கையாயிருப்போம்.
ஆவிக்குரிய வாழ்வில் திருப்தி அடைந்து நின்றுவிடாமல், ஆண்டவர் எதிர்பார்க்கும் பரிசுத்தத்தை நோக்கி தொடருவோம். நித்திய வாழ்வை சுதந்தரிப்போம். ஆமென் அல்லேலூயா!
 

No comments:

Post a Comment