Friday 15 April 2011

கண்ணீரை காண்கின்ற தேவன்

என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?. - (சங்கீதம் 56:8).

இந்த வசனம் தாவீதினால், கிறிஸ்து பிறப்பதற்கு முன் 1,020 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகும். அந்நாட்களில் மத்திய கிழக்கு பகுதிகளில், ஒரு போர்வீரன் போருக்கு போவதற்கு முன், தன் மனைவி அல்லது தன் தாயிடம் ஒரு கண்ணீர் பாட்டிலை வாங்கி கொடுப்பான். அந்த கண்ணீர் பாட்டில் கண்ணீரின் வடிவிலே இருக்கும். அதன் மூடி ஒரு விசேஷித்த கார்க்கினால் மூடப்பட்டிருக்கும். அதனால் அதனுள் உள்ள கண்ணீர் ஆவியாக போகாது. அதை வாங்கும் தாயோ, மனைவியோ, அந்த போர் வீரனிடம், ‘நீ போவது எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது.
நீ வரும்வரை நான் உன்னை நினைத்து கண்ணீர் வடித்து கொண்டிருப்பேன். இரவெல்லாம் நான் வடிக்கும் கண்ணீரை இந்த பாட்டிலில் சேர்த்து வைத்து நீ வரும்போது, நீ எனக்கு எவ்வளவு விசேஷித்தவன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உனக்கு பரிசளிப்பேன்’ என்று சொல்வார்களாம்.
கி.பி. 100 ம் வருடத்தில், எகிப்தில் உள்ள பார்வோனின் கல்லறையில் நிறைய கண்ணீர் பாட்டில்களை கண்டெடுத்தனர். அவைகள் அந்த பார்வோனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்தன.
அமெரிக்காவில் ஒருமுறை உள்நாட்டு கலவரம் வெடித்தபோது, அநேக போர்வீரர்கள் மரித்தனர். அவர்களுடைய விதவைகள், முதலாம் வருடத்தில் அவர்களின் இறந்த நாளில் கல்லறைகளுக்கு சென்று, அந்த கண்ணீர் பாட்டிலில் உள்ள கண்ணீரை தெளித்து, அந்த முதலாம் நினைவு நாளை கொண்டாடினார்கள். இன்று வரை துக்கத்தில் இருப்பவர்களுக்கு பரிசாக வெளிநாடுகளில் சில இடங்களில் கண்ணீர் பாட்டில்களை கொடுக்கிறார்கள். இப்படத்தில் இருப்பதைப் போன்ற கண்ணீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன.
இந்த கண்ணீர் பாட்டில்கள் நம்வேதத்திலும் எழுதப்பட்டிருப்பது எத்தனை ஆச்சரியம்! நம் தேவன் நம் கண்ணீரை கண்டு சும்மா போய் விடுகிறவரல்ல. நம்முடைய கண்ணீர்கள் ஒரு துருத்தியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கினறன. நம்முடைய வேதனைகள், பாடுகள், துக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்த தேவன் ஒருவர் உண்டு. அவருடைய துருத்தியில் நம் கண்ணீர் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. என் கண்ணீரை காண்கிறவர்கள் யாரும் இல்லை, என் துக்கங்களை காண்கிறவர்கள் யாரும் இல்லை, என் தலையணையை நான் கண்ணீரால் நனைக்கிறேன் என்று சொல்கிறீர்களா? உங்களை காணும் தேவன் உண்டு, உங்கள் கண்ணீரை கண்டு உங்களுக்கு விடுதலை அளிக்கும் தேவன் உண்டு. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார் என்று சங்கீதம் 22:24 ல் வாசிக்கிறோமே! நம்முடைய உபத்திரவத்தை பார்த்து, அதை அற்பமாய் எண்ணாமல், தம்மை நோக்கி கூப்பிடும்போது, கேட்டு பதில் கொடுக்கும் உன்னத தேவன் நம் தேவனல்லவோ!
நம் கண்ணீர் ஒரு நாளும் வீணாய்போவதில்லை. அது அவருடைய துருத்தியில் வைக்கப்பட்டிருக்கிறது. அன்று ஆகாரின் கண்ணீரை கண்ட தேவன், அவளுக்கு பதிலை கொடுத்ததினால் அல்லவா, அவள் அவருக்கு எல்ரோயி என்று பேரிட்டாள்! ஏல்ரோயி என்பதற்கு ‘என்னை காண்கின்ற தேவன்’ என்று பொருள்.
தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள் (1 சாமுவேல் 30:3,4). தங்கள் பிள்ளைகளும் மனைவிகளும் சிறைபிடிக்கப்பட்டு போனார்கள் என்று கேள்விபட்டபோது, எந்த தகப்பனால் சும்மா இருக்க முடியும்? தாவீதும் அவனோடு இருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்களாம். அந்த அளவு இருதயபாரத்தால் அவர்கள் நிறைந்திருந்தார்கள். அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி; நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார். அதன்படியே அவர்கள் அந்த தண்டை பின்தொடர்ந்த போது, அவர்களுடைய பகைஞர் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
ஒரு வேளை நீங்களும் பெலனில்லாமல் போகுமட்டும் அழுகிறீர்களோ? உங்கள் வாழ்க்கையில் காணப்படும் பாடுகள் நிமித்தம் யார் என்னை விடுவிப்பார் என்று கதறுகிறீர்களோ? தாவீதின் தேவன் இன்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் நம் கண்ணீரை துடைக்கிற தேவன். அவரை உறுதியாய் பற்றிக் கொண்டு என்னை விடுவியும் என்று அவர் பாதத்தை பிடித்து கொண்டு விடாதிருங்கள். உங்கள் கண்ணீர் அவர் பாதத்தில் சிந்தப்படட்டும். அப்பொழுது ‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்’ - (யோவன் 16:20) என்று நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுகிறிஸ்து உங்கள் துக்கங்களை சந்தோஷமாய் மாற்றுவார். கண்ணீரை துடைத்து கொள்ளுங்கள். உங்கள் துக்கம் நிச்சயமாகவே சந்தோஷமாய் மாறும். ஆமென் அல்லேலூயா!
ஒருநாள், நாம் கர்த்தருடைய சமுகத்தில் நிற்கும்போது, நமது கண்ணீரால் நிறைந்த துருத்தியை நம்மிடம் கொண்டு வந்து நம் தேவன் காட்டுவார், ‘அருமை மகளே, மகனே, இதோ நீ சிந்திய கண்ணீர்! நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் பார், ஒரு சொட்டையும் விடாமல் நான் சேர்த்து வைத்திருக்கிறேன்’ என்று காட்டுவார். மட்டுமல்ல, தமது புத்தகத்தை திறந்து, எதற்காக கண்ணீர் வடித்தோம் என்பதையும் தாம் எழுதியிருப்பதை நமக்கு காட்டுவார்! அல்லேலூயா!

கண்ணீரை காண்கிறார்
உன் கதறலை கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார்
நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்

Thursday 7 April 2011

மாற்றிடுமே உம்மை போலவே

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்-
-களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும்,
தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே
இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே 
பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதர-
-சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். 
                                            (2 பேதுரு 1:5-7)

jesus in the lord

praise the lord