Tuesday 7 June 2011

நன்றியுள்ள இருதயம்


அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17: 17-19).
வியட்நாமில் நடந்த போரில்,  ஒரு இராணுவத்தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு சாதாரண போர் வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை காப்பாற்றிவிட்டு, ஆனால் தான் காயப்பட்டு,  அதன் காயங்களினால் அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது,  அதைக் குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு,  அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்திற்கு அந்த போர்வீரனையும் அழைத்திருந்தார்கள்.

அந்த கூட்டத்திற்கு அந்த போர் வீரன் மிகவும் தாமதமாக வந்ததுமன்றி,  நன்கு குடித்துவிட்டு வந்திருந்தான். அங்கிருந்த உணவு பொருட்களை அநாயசமாக சாப்பிட்டதுமன்றி,  தன்னை காப்பாற்றிய அந்த தலைவனுக்கு தன் சார்பாக ஒரு நன்றியைக் கூட தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல,  சாப்பிட்டு முடித்தவுடன், தன்னை அழைத்திருந்த அந்தக குடும்பத்திற்கு ஒரு நன்றியைக் கூட தெரிவிக்காமல், பேசாமல் போய் விட்டான். அவன் போனவுடனே, அந்த தலைவனின் தாயார் கதறி அழுது,  ‘இந்த நன்றியில்லாத மனிதனுக்காகவா என் மகன் தன் ஜீவனைக் கொடுத்தான்’ என்று கதறினார்கள்.
இன்று நம்மில் எத்தனைப் பேர் அப்படி நன்றியில்லதவர்களாக இருக்கிறோம்? தேவன் நமக்கு பாராட்டிய கிருபைகள்தான் எத்தனை? அதை ஒரு முறையாவது நாம் நினைத்து அவரை துதிக்கிறோமா? பத்து குஷ்டரோகிகள் சுத்தமானாலும் ஒருவன் தான் திரும்ப வந்து அவருக்கு நன்றி சொன்னான். சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு,  இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று இயேசுகிறிஸ்து சொன்னாரல்லவா?
தேவன் செய்த நன்மைகளை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். அவருக்கு நன்றியறிதலுள்ளவர்களாய் இருப்போம். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தாரே! நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் நம்மை ஆசீர்வதித்திருக்கிறாரே! அவருக்கு நாம் எத்தனையாய் நன்றி சொல்ல வேண்டும்! ஒரு நிமிடம் ஒரு தாளை எடுத்து கர்த்தர் செய்த பத்து காரியங்களை எழுதி,  அப்பா உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு இப்படி கிருபை பாராட்டினீரே என்று கூறுவோமானால், அவர் எத்தனை மகிழ்வார்?
நாம் யாருக்காவது ஒரு நன்மை செய்யும்போது அவர்கள் நமக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கையானது. ஆனால் அவர்கள் நன்றி எதுவும் சொல்லாமல் போய் விட்டால், நாம் இந்த மனிதனுக்கு போய் செய்தோமே என்று நினைப்போமில்லையா? அதுப் போலத்தான் கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளுக்கு நாம் நன்றி சொல்லாமல் போனால், அவரும் அதுப் போலத்தான் நினைப்பார். மற்ற நன்மைகளை அவர் தருவார் என்று நாம் எதிர்ப்பார்ப்பது எப்படி?  நாம் அவரிடமிருந்து என்ன பெற்று கொண்டாலும் அதற்கு நன்றி சொல்ல பழகிக் கொள்வோம். இன்று, நாம் தேவன் செய்த நன்மைகளை மறப்பதினால்தான், வீண் பெருமை, அகந்தை நம்மை ஆட்கொள்கிறது. நாம் இருந்த நிலைமையிலேயே நாம் இன்று இல்லை. கர்த்தர் நம்மை நிச்சயமாக உயர்த்தியிருக்கிறார். நாம் இருந்த பழைய நிலைமையை மறக்கும்போதுதான்,  மற்றவர்களை காட்டிலும் நான் உயர்ந்தவன் என்று நம் மனம் பெருமை கொள்கிறது. ஆகையால் நாம் ஜெபிக்கும்போது,  அப்பா,  நீர் செய்த நன்மைகளை மறவாதிருக்கும் நன்றியுள்ள இருதயத்தை எனக்கு என்றும் தாரும் என்று ஜெபிக்க வேண்டும்.
நம்மோடு வேலை செய்கிற சகோதர சகோதரிகளுக்கு, ‘உங்களோடு நான் வேலை செய்வது எனக்கு சந்தோஷம், நன்றி’  என்று சொல்லிப் பாருங்கள்,  உங்கள் மேல் அவர்கள் வைத்திருக்கும் மதிப்பு உயரும். உங்கள் கணவர் அல்லது மனைவி செய்யும் காரியங்களுக்கு,  ‘என்மேல் கரிசனையாக செய்தாயே நன்றி’  என்றுச் சொல்லுங்கள். ‘இன்று சாப்பாடு பிரமாதமாக இருந்தது ‘Thank you’ என்று சொல்லுங்கள், அவர்கள் இன்னும் நன்றாக சமைத்து கொடுப்பார்கள். நன்றி என்று சொல்லுவோம். கர்த்தர் செய்த நன்மைகளை மறவாதிருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்;.

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசுராஜா நன்றி இயேசுராஜா

No comments:

Post a Comment