Thursday, 9 June 2011

சரீரமாகிய சபை


உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். -  (எபேசியர் 4:4-6).

உலகத்திலுள்ள அநேக மதங்கள் கிறிஸ்தவத்தைக் குறித்து, ‘பாருங்கள், அவர்களில் எத்தனை சபை பிரிவினைகள்! எத்தனை பாகுபாடுகள்! அவர்களுக்குள்ளே நான்தான் சரி என்று எத்தனை விவாதங்கள்!’ என்றுக் கூறுகின்றனர். அது சரிதான். அவர்களுடைய மதங்களில், இந்தமாதிரியானப் பாகுபாடுகள் கிடையாது. கிறிஸ்தவர்கள் வழிபடுவது ஒரேக் கடவுளைத்தான்  என்றாலும், அநேகப் பிரிவுகள் உண்டென்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நான் பெந்தேகோஸ்தே சபை, நான் C.S.I., நான் லுத்தரன் என்று பாகுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு பிரிவினரும் கர்த்தரை தொழுதுக் கொள்வதும் வித்தியாசமான முறையில் இருக்கின்றது. சிலருக்கு சத்தமாய் கைகளைத்தட்டி,  பாட்டுப்பாடி,  கைகளை உயர்த்தி ஆராதிப்பது அவர்களுடைய விருப்பம்,  மற்றவர்களுக்கு அமைதியாக இருந்த இடத்தில் இருந்து,  தொழுதுக் கொள்வது வழக்கமாயிருக்கலாம். இப்படி வித்தியாசங்கள் இருந்தாலும், உலகம் எதை கவனிக்க தவறுகிறது என்றால், சபை என்பது ஒரே சரீரம் என்பதை. உலகம் மட்டுமல்ல,  அநேக கிறிஸ்தவர்களும் அதை மறந்துப் போகின்றதினாலே,  நான்தான் பரிசுத்தவான்,  மற்ற சபையினரிடம் பரிசுத்தம் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்.

ஒரே ஒரு மணவாட்டிதான் கிறிஸ்துவுக்கு உண்டு. அந்த மணவாட்டி,  தன் வஸ்திரங்களை கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்டவள். மணவாளனின் வருகைக்காக ஆவலோடு காத்திருப்பவள். அவள் தான் பரிசுத்த சபையாகிய மணவாட்டி.  அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறதுப்போல, ஒரே சரீரமும்,  ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும்,  ஒரே ஞானஸ்நானமும்,  எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு.

நம்மில் அநேக பிரிவினைகள் இருந்தாலும்,  நாம் ஒன்றாக இருக்கிறோம். நான் அந்த சபையைச் சேர்ந்தவன், நான் இந்த சபையைச் சேர்ந்தவன் என்றுச் சொல்லிக் கொண்டாலும்,  நாம் அனைவரும்,  கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில்  மணவாட்டிகளாகவும்,  கிறிஸ்து நம் மணவாளனாகவும் இருக்கிறார்  என்பதை ஒரு நாளும் மறந்துப் போகக் கூடாது.
பரலோகத்தில் எந்த சபை பிரிவுகளும் இருக்காது. அங்கு அனைவரும் ஒருமிக்க தேவனை உயர்த்தி துதிக்கும் சத்தம் மட்டுமே இருக்கும். அவர்கள் எந்த நாடாயிருந்தாலும், என்ன மொழியாக இருந்தாலும், எந்த ஜனமாயிருந்தாலும் எந்த சபையாயிருந்தாலும் அவர்கள்  செய்யப் போவது தேவனை ஆராதிப்பது மட்டுமே.
மட்டுமல்ல, சபையானது,  சத்தியத்திற்கு தூணும் ஆதாரமுமாயிருப்பதால் (1தீமோத்தேயு 3:15), அதை பாதாளத்தின் வாசல்கள் ஒருபோதும் மேற்கொள்வதில்லை (மத்தேயு 16:18). சபையை அழிக்க யாராலும் முடியாது. ஆமென் அல்லேலூயா!

No comments:

Post a Comment