Thursday, 9 June 2011

காலத்தை பிரயோஜனப்படுத்து



ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். - (எபேசியர் 5: 15-17).

ஒரு மனிதன் தன் விடுமுறை நாளில், மீன் பிடிப்பதற்காக சென்றான். அப்போது ஒரு அழகிய மீன் அவனுடைய தூண்டிலில் சிக்கியது. அதைப் பார்த்து, அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்த மீன் பேச ஆரம்பித்தது,  ‘தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்,  நான் உங்களுடைய மூன்று ஆசைகளை நிறைவேற்றுகிறேன்’ என்று சொன்னது. அப்போது அந்த மனிதன், ‘இல்லை, எனது ஐந்து ஆசைகளை நிறைவேற்று, நான் உன்னை விட்டு விடுகிறேன்’  என்றுக் கூறினான். அதற்கு அந்த மீன், ஷஎனக்கு மூன்று ஆசைகளை நிறைவேற்றதான் சக்தி இருக்கிறது| என்று சொன்னது, அப்போது அந்த மனிதன், ‘இல்லை, எனக்கு நாலரை ஆசைகளையாவது, நிறைவேற்ற வேண்டும்’  என்று திரும்ப பேரம் பேசினான். ‘ஓ, என்னால் மூன்றுதான் முடியும் என்று சொன்னேனே, தயவு செய்து என்னை விட்டுவிடு’  என்று அவனிடம் கெஞ்சியது. ஆனால் அந்த மனிதனோ, ‘சரி, குறைந்த பட்சம் நான்காவது கொடு’  என்று சொல்லி முடிப்பதற்குள் இந்த மீன் அவனது கைகளிலேயே மடிந்துப் போனது. அவன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பேரம் பேசியே நழுவ விட்டான்.

ஒரு வேளை இந்த வாரம் உங்களுக்கு உங்கள் தகுதிக்கு மேல் செய்யும்படியாக, ஒரு வேலை வரலாம், ஆனால், நீங்கள் ஐயோ, என்னால் செய்ய முடியாது என்று நினைக்கலாம், ஒருவேளை நான் செய்யப் போய் தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது? என்று நினைக்கலாம், ஆனால் ஒருவேளை அது வெற்றியாக முடிந்து விட்டால்? சில நல்ல காரியங்களில், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சந்தர்ப்பங்களை நாம் நழுவ விடக் கூடாது. ஜெபித்து, ஞானமாய் அதை முயற்சி செய்ய வேண்டும். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் என்ற வேதம் நமக்கு ஆலோசனை கூறுகிறது.

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் வேதம் நம்மை எச்சரிக்கிறது. நாட்கள் மிகவும் பொல்லாதவைகளாய் இருப்பதால், நாம் நம் ஆத்தும இரட்சிப்பை தள்ளிப் போடக்கூடாது. நாளை ஒருவேளை நமக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்றால், என்ன செய்வோம்? இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2கொரிந்தியர் 6:2) என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஆகவே காலத்தை பிரயோஜனப்படுத்தி, இரட்சிக்கப்படுவோம். நமது கையில் கொடுக்கப்பட்டிருக்கிற சந்தர்ப்பத்தை, தருணத்தை, காலத்தை நாம் வீணாக்காமல், ஞானமாய் அதை பிரயோஜனப்படுத்திக் கொள்ள தேவன் தாமே, கிருபை செய்வாராக!

எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்



ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்,  எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். - (பிலிப்பியர் 2: 9-11).

1927-ம் வருடம் ஸ்மித் விகிள்ஸ்வொர்த் (Smith Wigglesworth) என்னும் தேவ ஊழியர்,  ஒரு திறந்த சந்தைப் பகுதியில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அங்கு ஒரு மனிதன் அங்கு இருந்த விளக்கு கம்பத்தின்மேல் சாய்ந்துக் கொண்டு அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஸ்மித் தன் பிரசங்கத்தை முடித்து விட்டு, அந்த மனிதனிடம் நேரடியாகச் சென்று,  ‘என்ன,  உங்களுக்கு உடம்பு சரியில்லையா’  என்றுக் கேட்டார். அதற்கு அந்த மனிதன் தன்கைகளைக் காட்டினான். அதில் ஒரு கத்தி பளபளத்தது. அவன் சொனனான்,  தனக்கு துரோகம் செய்த மனைவியை கொல்வதற்காக தான் போய்க் கொண்டிருந்ததாகவும்,  அப்போது ஸ்மித் அவர்கள் பேசிக் கொண்டிருந்தததைக் கேட்டதாகவும்,  அவர் இயேசுவின் நாமத்திலுள்ள வல்லமையைக்குறித்து கேட்டபோது அவருக்கு அந்த இடத்திலிருந்து அசைய முடியாதபடி போனதாகவும் கூறினார். அங்குதானே,  இருவரும் முழங்கால்படியிட்டு, போவோர் வருவோர் நடுவே அந்த மனிதன் இயேசுவை ஏற்றுக் கொண்டார். பின் ஸ்மித் அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று,  அவருக்கு வேறு ஆடைகளை கொடுத்து, கொஞ்சம் பணத்தையும் கொடுத்து,  அந்த மனிதன் ஒரு வீடு வாங்க உதவி செய்து,  அந்த மனிதனை விட்டு வேறு ஒருவனுடன் வாழ்ந்துக் கொண்டிருந்த அவருடைய மனைவியை மன்னித்து,  தன்னோடு இருக்க அழைத்தபோது அவளும் வந்து, இருவரும் ஒன்றாக இணைந்ததாகவும்,  அந்த மனிதர் கர்த்தருடைய ஊழியத்தை வல்லமையாக நிறைவேற்றவும் தேவன் கிருபைச் செய்தார் என்றும் ஸ்மித் தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருந்தார். ஆம் இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு.

பில் கேட்ஸ், அம்பானி, லட்சுமி மிட்டால் இவர்களுடைய பெயர்கள் எல்லாம் மிகவும் அறியப்பட்டதாகவும், செல்வாக்குள்ள பெயர்களாகவும், உலகத்தில் பிரசித்திப் பெற்ற பெயர்களாகவும் இருக்கலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவின பெயரோ இவர்கள் எல்லாருடைய பெயர்களையும் சேர்த்து உள்ள வல்லமையை விட மிகப் பெரிய வல்லமை உள்ள பெயராகும். அவருடைய பெயர், மனிதனை இரட்சிக்க வல்லதாகவும்,  ஒரு மனிதனின் எண்ணத்தையும் செயல்களையம் மாற்ற வல்லதாகவும்,  உடைந்துப் போன குடும்பங்களை சேர்த்து வைக்க வல்லதாகவும், உடைந்த உள்ளத்தை காயம் கட்டுவதாகவும் உள்ள ஒரே நாமம் இயேசுகிறிஸ்துவின் நாமமே ஆகும். அந்த வல்லமையுள்ள நாமத்தில் தேவன் ‘வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்’  ஆமென் அல்லேலூயா!

அந்த நாமத்தை உச்சரிக்கும் போதே பேய்கள் பறந்தோடும், வியாதிகள் பறந்தோடும், சாபங்கள் பற்நதோடும், பாவங்கள் உருண்டோடும். பிசாசுகள் பயந்தலறி ஓடும். அவருடைய நாமத்தில் யாவருடைய முழங்கால்களும் முடங்கும். இந்த உலகத்தில் அந்த நாமத்திற்கு ஈடு இணையான பெயர் வேறெதுவும் இல்லை. பிசாசு, பாவம,; உலகை ஜெயித்த நாமம் இயேசுவின் நாமமே. தூதர்களும் வணங்கும் நாமம் இயேசுவின் நாமமே.
என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான் 14:14) என்று வாக்குதத்தம் செய்தவர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார். அவருடைய நாமத்தில் கேட்பதெல்லாம் நமக்கு தருவார். நம்மை இரட்சித்த நாமம் இயேசுவின் நாமமே,  நம்மை பரலோகத்தில் சேர்க்கும் நாமம் இயேசுவின் நாமமே. இன்றும் அதிசயங்கள், அற்புதங்கள் செய்யும் நாமம் இயேசுவின் நாமமே. மரித்தோரை உயிரோடு எழுப்பும் நாமம் இயேசுவின் நாமமே. மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளியை சுகப்படுத்தும் நாமம் இயேசுவின் நாமமே. தற்கொலைக்கு நேராக ஓடும் மனிதனை தடுத்து நிறுத்தும் நாமம் இயேசுவின் நாமமே. புது ஜீவனை அவனுக்கு கொடுக்கும் நாமம் இயேசுவின் நாமமே. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. இயேசுவின் நாமத்திற்கு இருக்கும் மகிமை சொல்லிக் கொணடே போனால் இந்த கட்டுரை முடிவடையாது. அத்தனை அதிசயமான நாமம்,  நம்மை ஆறுதல் படுத்தும் நாமம்  இயேசுவின் நாமமே.. அந்த நாமத்தை சொன்னாலே நமக்குள் பரவசத்தைக் கொடுப்பது அந்த விலையேறப் பெற்ற நாமமே. அந்த நாமத்தை உறுதியாய் பற்றிக் கொள்வோம். இந்த இம்மையில் மாத்திரமல்ல, மறுமையிலும் நம்மை வழிநடத்தும் நாமம் அந்த நாமத்திற்கு மாத்திரமே உண்டு. ஆமென் அல்லேலூயா!

வேதனை இல்லாத ஐசுவரியம்

 

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். - (நீதிமொழிகள் 10:22).

ஜான் .டி. ராக்பெல்லர் சீனியர் (John D. Rockefeller Sr.)  என்பவர் எப்படியாகிலும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவராய் அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அவரது 33ஆவது வயதில் முதலாவது மில்லியன் டாலர்களை சம்பாதித்தார். பிறகு 43ஆவது வயதில் உலகத்திலேயே பெரிய கம்பெனிக்கு உரிமையாளர் ஆனார். 53ஆவது வயதில் அவரே உலகின் பெரிய பணக்காரரானார். அவரது விடாமுயற்சி அவரை அந்த நிலைக்குக் கொண்டு வந்தது.
ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு அலோபீசியா (Alopecia) என்னும் வியாதி வந்தது. அதன்படி அவருக்கு எல்லா முடியும் கொட்டிப்போகும்,  ஏன்,  கண்களின மேல் இருக்கும் முடிக் கூட கொட்டி போகும். ஆனால் அது பரவாயில்லையே,  அவரால் ஒன்றும் சாப்பிட முடியாது.  அப்படி ஒரு வியாதி அவரைத் தாக்கியது. எத்தனையோ மில்லியனுக்கு சொந்தக்காரர்,  ஆனால் அவரால் பாலையும்,  சில பிஸ்கெட்டுகளையும் தான் சாப்பிட முடியுமேத் தவிர வேறு ஒன்றும் சாப்பிட முடியாது! என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அது மட்டுமல்ல, அவர் பணக்காரராய் இருந்தபடியால் அவருக்கு அநேக எதிரிகள் இருந்தார்கள். அவரைச் சுற்றிலும், எப்போதும் பாதுகாப்பு படையினர் அவரைக் காவல் காத்தனர்.  ஏனென்றால் யார்,  எப்போது,  அவரை கொலை செய்வார்கள் என்று அறியாததால். இப்படிபட்ட பணம் தேவைதானா?

அவருக்கு வைத்தியம் செய்த வைத்தியர்கள் அவர் இன்னும் ஒரு வருடம் தான் உயிரோடு இருப்பார் என்று சொல்லி விட்டார்கள். அதைக் கேள்விப்பட்ட செய்திதாள்கள்,  அவர் உயிர் அப்போதே போய்விட்டதுப் போல செய்திகளை வெளியிட்டனர். அவருக்கு தூக்கம் என்பது பறந்துப்  போயிற்று. அவர் ஒரே யோசனை செய்ய ஆரம்பித்தார். இன்று மரித்தால் ஒரு பைசாவையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்கிற ஞானம் அவருக்கு உதித்தது. பணமே எல்லாவற்றிற்கும் முடிவல்ல என்பதை உணர்ந்தார். பணத்தால் தன் உடல்நிலையை சரியாக்க முடியாது, பணத்தால் நிம்மதி கொடுக்க முடியாது என்றெல்லாம் உணர ஆரம்பித்தார்.
ஒருநாள் காலை புதுத்தெம்போடு எழுந்தார். தன்னுடைய அளவற்ற செல்வத்தை எடுத்து,  ஆலயக் கட்டுமானத்திற்கும்,  மிஷனரி ஊழியங்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தார். ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உதவி கரம் நீட்டி,  வாரி வழங்க ஆரம்பித்தார். Rockefeller foundation  என்று ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பித்து,  அதன் மூலம் மருத்துவ ஆய்வுகளுக்கு தேவையான பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் அப்படிக் கொடுத்ததன் மூலம்,  பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் அநேக வியாதிகளுக்கு அந்த ஸ்தாபனத்தின் உதவியினால் மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ராக்பெல்லர் உறங்க ஆரம்பித்தார். அவருடைய தூக்கம் இன்பமாக மாறியது. டாக்டர்கள் அவர் ஒரு வருடம் தான் அதாவது 54 வயது வரைதான் உயிரோடு இருப்பார் என்றுக் கூறினர்,  ஆனால் அதற்கு பிறகு, 98 வயது வரை சுகமாய் வாழ்ந்து,  கிறிஸ்துவுக்குள் மரித்தார். அல்லேலூயா!
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் என்பது எத்தனை உண்மை. எத்தனைதான் சம்பாதித்தாலும்,  கர்த்தரின் ஆசீர்வாதமே வேதனை இல்லாத ஐசுவரியம்!  கொஞ்சமாக சம்பாதித்தாலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தால் அது கோடி பணம் சம்பாதிப்பதற்கு ஒப்பானது. ஏராளமான பணம் இருந்து, சமாதானம் இல்லாதிருந்தால் அல்லது உடல்வியாதி கொண்டிருந்தால் அத்தனை பணத்தினாலும் எந்த பயனும் இல்லை. நமக்கு வரும் சம்பாத்தியம் எத்தனையாயிருந்தாலும் அதை கர்த்தரின் பாதத்தில் வைத்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு அதை உபயோகிப்போமானால் அவருடைய ஆசீர்வாதம் நமக்கு ஐசுவரியத்தை நிச்சயமாய்த்  தரும். ‘இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல,  ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர் கர்த்தர்’  என்று உபாகமம் 8:18ல் பார்க்கிறோம். நான் என் வேலைக்குச் செல்லுமுன் இந்தநாளில் ஐசுவரியத்தை சம்பாதிக்கிறதற்கு எனக்கு நீர் பெலனைக் கொடுக்கிறதற்காக ஸ்தோத்திரம் என்று சொல்லாமல் போனதேயில்லை. அதுப் போல வேலை முடித்து வந்தவுடன், இந்த நாளில் என் வேலையை நன்றாக முடிப்பதற்கு உதவி செய்தீரே உமக்கு நன்றி! என்றுச் சொல்லுவேன்.  கர்த்தர் இன்று வரை கிருபையாய் பெலனைக் கொடுத்து வருகிறார். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு (நீதிமொழிகள் 8: 18) என்றுக் கர்த்தர் சொல்லுகிறார்;. அவருக்கு பிரியமானவர்களுக்கு அவர் அதைக் கொடுக்கிறார்.
அநேக செல்வத்தை வைத்திருந்த ராக்பெல்லர் சுயநலமாய், தனக்கென்று வைத்திருந்த போது,  அவருக்கு நிம்மிதி இல்லை, உறக்கம் இல்லை. ஆனால் அவர் மற்றவர்களுக்கு உதவி கரம் நீட்டியபோது,  அவருடைய நித்திரை இன்பமாக மாறியது. அவர் உடல் நோய்கள் அவரைவிட்டு மாறியது. நீண்ட ஆயுசை கர்த்தர் அவருக்கு கொடுத்தது,  மற்றவர்களுக்கு கொடுப்பதினால், சந்தோஷமும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பதை விளங்கப் பண்ணினார். நமக்கு தேவன் கொடுத்த ஐசுவரியத்தில் ஆலயத்திற்கும்,  கர்த்தருடைய ஊழியத்திற்கும்,  ஏழைகளுக்கும் உதவிக்கரம் நீட்டுவோம்,  கர்த்தர் இன்னும் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

சரீரமாகிய சபை


உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். -  (எபேசியர் 4:4-6).

உலகத்திலுள்ள அநேக மதங்கள் கிறிஸ்தவத்தைக் குறித்து, ‘பாருங்கள், அவர்களில் எத்தனை சபை பிரிவினைகள்! எத்தனை பாகுபாடுகள்! அவர்களுக்குள்ளே நான்தான் சரி என்று எத்தனை விவாதங்கள்!’ என்றுக் கூறுகின்றனர். அது சரிதான். அவர்களுடைய மதங்களில், இந்தமாதிரியானப் பாகுபாடுகள் கிடையாது. கிறிஸ்தவர்கள் வழிபடுவது ஒரேக் கடவுளைத்தான்  என்றாலும், அநேகப் பிரிவுகள் உண்டென்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நான் பெந்தேகோஸ்தே சபை, நான் C.S.I., நான் லுத்தரன் என்று பாகுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு பிரிவினரும் கர்த்தரை தொழுதுக் கொள்வதும் வித்தியாசமான முறையில் இருக்கின்றது. சிலருக்கு சத்தமாய் கைகளைத்தட்டி,  பாட்டுப்பாடி,  கைகளை உயர்த்தி ஆராதிப்பது அவர்களுடைய விருப்பம்,  மற்றவர்களுக்கு அமைதியாக இருந்த இடத்தில் இருந்து,  தொழுதுக் கொள்வது வழக்கமாயிருக்கலாம். இப்படி வித்தியாசங்கள் இருந்தாலும், உலகம் எதை கவனிக்க தவறுகிறது என்றால், சபை என்பது ஒரே சரீரம் என்பதை. உலகம் மட்டுமல்ல,  அநேக கிறிஸ்தவர்களும் அதை மறந்துப் போகின்றதினாலே,  நான்தான் பரிசுத்தவான்,  மற்ற சபையினரிடம் பரிசுத்தம் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்.

ஒரே ஒரு மணவாட்டிதான் கிறிஸ்துவுக்கு உண்டு. அந்த மணவாட்டி,  தன் வஸ்திரங்களை கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்டவள். மணவாளனின் வருகைக்காக ஆவலோடு காத்திருப்பவள். அவள் தான் பரிசுத்த சபையாகிய மணவாட்டி.  அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறதுப்போல, ஒரே சரீரமும்,  ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும்,  ஒரே ஞானஸ்நானமும்,  எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு.

நம்மில் அநேக பிரிவினைகள் இருந்தாலும்,  நாம் ஒன்றாக இருக்கிறோம். நான் அந்த சபையைச் சேர்ந்தவன், நான் இந்த சபையைச் சேர்ந்தவன் என்றுச் சொல்லிக் கொண்டாலும்,  நாம் அனைவரும்,  கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில்  மணவாட்டிகளாகவும்,  கிறிஸ்து நம் மணவாளனாகவும் இருக்கிறார்  என்பதை ஒரு நாளும் மறந்துப் போகக் கூடாது.
பரலோகத்தில் எந்த சபை பிரிவுகளும் இருக்காது. அங்கு அனைவரும் ஒருமிக்க தேவனை உயர்த்தி துதிக்கும் சத்தம் மட்டுமே இருக்கும். அவர்கள் எந்த நாடாயிருந்தாலும், என்ன மொழியாக இருந்தாலும், எந்த ஜனமாயிருந்தாலும் எந்த சபையாயிருந்தாலும் அவர்கள்  செய்யப் போவது தேவனை ஆராதிப்பது மட்டுமே.
மட்டுமல்ல, சபையானது,  சத்தியத்திற்கு தூணும் ஆதாரமுமாயிருப்பதால் (1தீமோத்தேயு 3:15), அதை பாதாளத்தின் வாசல்கள் ஒருபோதும் மேற்கொள்வதில்லை (மத்தேயு 16:18). சபையை அழிக்க யாராலும் முடியாது. ஆமென் அல்லேலூயா!
கிறிஸ்துவுக்குள் பூரண வளர்ச்சி

நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். - (பிலிப்பியர் 3:12).

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டை சேர்ந்த திமான்தஸ் (Timanthes) என்ற வாலிபன் மிகச்சிறந்த ஓவியர் ஒருவரிடம் ஓவியம் கற்று வந்தான். அநேக ஆண்டுகளுக்கு பின் அவன் சுயமாய் ஒரு ஓவியத்தை வரைந்து முடித்தான். அது மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆகவே அதன் முன்பு அமர்ந்து அதன் அழகை ரசித்து கொண்டேயிருக்க ஆரம்பித்தான். இது அநேக நாட்களாக் நடந்து வந்தது. வேறெந்த வேலையும் செய்யமால், எதையும் புதிதாய் கற்று கொள்ளாமல் அந்த ஓவியத்தையே பார்த்து ரசித்து கொண்டிருந்தான். இதை கவனித்து வந்த குரு அந்த ஓவியம் முழுவதையும் பெயிண்ட் அடித்து அலங்கோலமாக்கினார். மறுநாள் அதை பார்த்த வாலிபன் தான் ரசனையாய் வரைந்த ஓவியம் அலங்கோலமாய் இருப்பதை கண்டு கடுங்கோபம் கொண்டு குருவிடம் ஓடினான்.
அவர், 'ஆம் இதை உன் நன்மைக்காகவே செய்தேன். இந்த ஓவியம் உன் வளர்ச்சியை பாதிக்கிறது. நீ புதிய புதிய ஓவியங்கள் வரைந்து இன்னும் வாழ்வில் முன்னேறி, உன் திறமைகளை வளர்த்து கொள்' என்று அறிவுரை கூறினார். அவன் அந்த அறிவுரையை கேட்டு மிகவும் கடினமாக உழைத்து மிக புகழ்பெற்ற பழங்கால ஓவியத்தை வரைந்தான்.
கிறிஸ்தவ வாழ்க்கையும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பூரணமாகி விடுவதில்லை. இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்ற உடன் நாம் பூரண பரிசுத்தர்களாக மாறி விடுவதில்லை. பரிசுத்தத்தை நோக்கி நமது பயணத்தை ஆரம்பிக்கிறோம். ஆகவே தான் அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் 'நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்' என்று எழுதுகிறார். எப்போதுமே நாம் கிறிஸ்தவ வாழ்வில் திருப்தி அடைந்து நின்று விடக்கூடாது. பரிசுத்த்தின் மேல் பரிசுத்தம் அடையவும், பொறுமையிலிருந்து நீடிய பொறுமைக்கும், சாந்தத்திலிருந்து நீடிய சாந்தத்திற்கும், தாழ்மையிலிருந்து மிகுந்த மனத்தாழ்மைக்கும் நேராய் முன்னேறி கொண்டே இருக்க வேண்டும். இன்னும் தேவனிடம் கிட்டி சேர வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் நமக்குள் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
பிரியமானவர்களே, நாம் கிறிஸ்துவை நெருங்க நெருங்க நமக்குள் இருக்கும் சின்னஞ்சிறு குறைகளையும் பாவங்களையும் தேவன் உணர்த்தி காட்டுவார். அதாவது சுத்தமான ஒரு வெள்ளைத்துணியில் ஒரு முடி விழுந்தாலும் கண்டுபிடித்து விடுவோமல்லவா? அதை போல வெளிச்சமாகிய அவரை நெருங்கி கிட்டி சேர சேர நமது சிறு குறைகளையும் அறிந்து அவரிடம் மன்னிப்பிற்கு கெஞ்சுவோம். ஏனென்றால் நமது இலக்கு 'கிறிஸ்துவுக்கு ஒப்பாய்' மாற வேண்டும் என்பதாகவே இருக்கும். வேத வாசிப்பிலும், ஜெபத்திலும், செய்யும் ஊழியத்திலும், கொடுக்கும் காணிக்கையிலும் திருப்தி அடைந்து விட கூடாது. நமது ஓட்டம் ஜெயமாய் முடியும் நாள் வரை நாம் ஆசையாய் பவுலை போல தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.
'நீ எல்லாவற்றிலும் தேறினவனாகி விட்டாய், உன்னை போல தாழ்மையாய் இநத ஆலயத்தில் யாருமில்லை. இத்தனை முறை வேதத்தை வாசித்து விட்டாயே, நீ கைக்கொள்ளாத கட்டளை வேறெதுவும் வேதத்தில் இல்லை' என்பன போன்றவை பிசாசின் தந்திரமே ஆகும். பிசாசின் தந்திரங்களுக்கு எச்சரிக்கையாயிருப்போம்.
ஆவிக்குரிய வாழ்வில் திருப்தி அடைந்து நின்றுவிடாமல், ஆண்டவர் எதிர்பார்க்கும் பரிசுத்தத்தை நோக்கி தொடருவோம். நித்திய வாழ்வை சுதந்தரிப்போம். ஆமென் அல்லேலூயா!
 

Tuesday, 7 June 2011

நன்றியுள்ள இருதயம்


அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17: 17-19).
வியட்நாமில் நடந்த போரில்,  ஒரு இராணுவத்தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு சாதாரண போர் வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை காப்பாற்றிவிட்டு, ஆனால் தான் காயப்பட்டு,  அதன் காயங்களினால் அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது,  அதைக் குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு,  அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்திற்கு அந்த போர்வீரனையும் அழைத்திருந்தார்கள்.

அந்த கூட்டத்திற்கு அந்த போர் வீரன் மிகவும் தாமதமாக வந்ததுமன்றி,  நன்கு குடித்துவிட்டு வந்திருந்தான். அங்கிருந்த உணவு பொருட்களை அநாயசமாக சாப்பிட்டதுமன்றி,  தன்னை காப்பாற்றிய அந்த தலைவனுக்கு தன் சார்பாக ஒரு நன்றியைக் கூட தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல,  சாப்பிட்டு முடித்தவுடன், தன்னை அழைத்திருந்த அந்தக குடும்பத்திற்கு ஒரு நன்றியைக் கூட தெரிவிக்காமல், பேசாமல் போய் விட்டான். அவன் போனவுடனே, அந்த தலைவனின் தாயார் கதறி அழுது,  ‘இந்த நன்றியில்லாத மனிதனுக்காகவா என் மகன் தன் ஜீவனைக் கொடுத்தான்’ என்று கதறினார்கள்.
இன்று நம்மில் எத்தனைப் பேர் அப்படி நன்றியில்லதவர்களாக இருக்கிறோம்? தேவன் நமக்கு பாராட்டிய கிருபைகள்தான் எத்தனை? அதை ஒரு முறையாவது நாம் நினைத்து அவரை துதிக்கிறோமா? பத்து குஷ்டரோகிகள் சுத்தமானாலும் ஒருவன் தான் திரும்ப வந்து அவருக்கு நன்றி சொன்னான். சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு,  இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று இயேசுகிறிஸ்து சொன்னாரல்லவா?
தேவன் செய்த நன்மைகளை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். அவருக்கு நன்றியறிதலுள்ளவர்களாய் இருப்போம். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தாரே! நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் நம்மை ஆசீர்வதித்திருக்கிறாரே! அவருக்கு நாம் எத்தனையாய் நன்றி சொல்ல வேண்டும்! ஒரு நிமிடம் ஒரு தாளை எடுத்து கர்த்தர் செய்த பத்து காரியங்களை எழுதி,  அப்பா உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு இப்படி கிருபை பாராட்டினீரே என்று கூறுவோமானால், அவர் எத்தனை மகிழ்வார்?
நாம் யாருக்காவது ஒரு நன்மை செய்யும்போது அவர்கள் நமக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கையானது. ஆனால் அவர்கள் நன்றி எதுவும் சொல்லாமல் போய் விட்டால், நாம் இந்த மனிதனுக்கு போய் செய்தோமே என்று நினைப்போமில்லையா? அதுப் போலத்தான் கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளுக்கு நாம் நன்றி சொல்லாமல் போனால், அவரும் அதுப் போலத்தான் நினைப்பார். மற்ற நன்மைகளை அவர் தருவார் என்று நாம் எதிர்ப்பார்ப்பது எப்படி?  நாம் அவரிடமிருந்து என்ன பெற்று கொண்டாலும் அதற்கு நன்றி சொல்ல பழகிக் கொள்வோம். இன்று, நாம் தேவன் செய்த நன்மைகளை மறப்பதினால்தான், வீண் பெருமை, அகந்தை நம்மை ஆட்கொள்கிறது. நாம் இருந்த நிலைமையிலேயே நாம் இன்று இல்லை. கர்த்தர் நம்மை நிச்சயமாக உயர்த்தியிருக்கிறார். நாம் இருந்த பழைய நிலைமையை மறக்கும்போதுதான்,  மற்றவர்களை காட்டிலும் நான் உயர்ந்தவன் என்று நம் மனம் பெருமை கொள்கிறது. ஆகையால் நாம் ஜெபிக்கும்போது,  அப்பா,  நீர் செய்த நன்மைகளை மறவாதிருக்கும் நன்றியுள்ள இருதயத்தை எனக்கு என்றும் தாரும் என்று ஜெபிக்க வேண்டும்.
நம்மோடு வேலை செய்கிற சகோதர சகோதரிகளுக்கு, ‘உங்களோடு நான் வேலை செய்வது எனக்கு சந்தோஷம், நன்றி’  என்று சொல்லிப் பாருங்கள்,  உங்கள் மேல் அவர்கள் வைத்திருக்கும் மதிப்பு உயரும். உங்கள் கணவர் அல்லது மனைவி செய்யும் காரியங்களுக்கு,  ‘என்மேல் கரிசனையாக செய்தாயே நன்றி’  என்றுச் சொல்லுங்கள். ‘இன்று சாப்பாடு பிரமாதமாக இருந்தது ‘Thank you’ என்று சொல்லுங்கள், அவர்கள் இன்னும் நன்றாக சமைத்து கொடுப்பார்கள். நன்றி என்று சொல்லுவோம். கர்த்தர் செய்த நன்மைகளை மறவாதிருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்;.

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசுராஜா நன்றி இயேசுராஜா

இரட்சிக்கும் இயேசுவின் இரத்தம்


அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். - (பிலிப்பியர் 2:6-8).
உலகில் அநேக மக்கள், இயேசுகிறிஸ்துவை ஒரு நல்ல போதகராக ஏற்றுக் கொள்கிறார்கள். அவருடைய எளிய சத்தியங்களை இதுவரை யாரும் போதிக்காத சத்தியம் என்பதையும் ஏற்று கொள்கிறார்கள். ஆனால் அவர் தேவன், தேவனுடைய குமாரன் என்ற சத்தியததை ஏற்க மறுத்து, தங்களுடைய பாவத்திற்காக தம் இரத்தத்தை சிந்தின இரட்சகர்தான் இயேசு என்ற சத்தியத்தையும், தாங்கள் இரட்சிப்படைய ஒரு இரட்சகர் உண்டு என்பதையும் ஏற்க மறுக்கிறார்கள்.

கிரேக்க தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ் 50 வருடங்களும், பிளாட்டோ 50 வருடங்களும், அரிஸ்டாட்டில் 40 வருடங்களும் போதித்தனர். அவர்கள் உலகிலேயே மிகப் பெரிய தத்துவ ஞானிகள் என்று அழைக்கப்பட்டனர். ஏன் அவர்களிடம் கற்றறிந்த கமாலியேலினிடத்தில்தான் பவுல் அப்போஸ்தலன் கல்வி பயின்றார் (அப்போஸ்தலர் 22:3). ஆனால் இவர்கள் மூவரும் இணைந்து 140 வருடங்கள் போதித்த போதனைகளைவிட இயேசுகிறிஸ்துவின் மூன்றறை வருட போதனை உலகத்தையே ஒரு மாறுதலுக்கு கொண்டு வந்தது. உலகத்தையே அசைத்தது. அவர்கள் மூவர் சேர்ந்து செய்த போதனைகளை கடைபிடிப்பவர்களைவிட இயேசுகிறிஸ்துவின போதனைகளை கடைபிடிப்பவர்களே அதிகம்!

இயேசுகிறிஸ்து எந்த ஓவியங்களையும் வரையவில்லை. ஆனால் அவருடைய போதனைகள், லியானார்டோ டாவின்சி, மைக்கேல் ஆஞ்சலோ, ராபீல் போன்ற தலைசிறந்த ஓவியர்களுக்கு அவருடைய ஓவியங்களை வரைவதற்கு ஒரு ஊன்றுகோலாய் இருந்தது.
இயேசுகிறிஸ்து ஒரு கவிதையையும் எழுதவில்லை. ஆனால், மில்டன், டான்டி போன்ற உலகப் புகழ் பெற்ற கவிஞர்கள் அவரைக் குறித்து உன்னதமான கவிதைகளை இயற்றினார்கள். அவர் ஒரு பாடலையும் எழுதவில்லை, ஆனால் பீத்தோவன், ஹைடன் போன்ற புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் அவரைக்குறித்து, பாடல்களை அதிகமாய் இயற்றியும், அருமையான தங்களது இசையால் அவரை புகழ்ந்தும் அவரை சிறப்பித்தனர்.  இன்றளவும், அவரைக் குறித்த பாடல்கள் ஒவ்வொரு மொழிகளிலும் அதிகமாய் பாடப்பட்டு வருகிறது.
இப்படி உலகத்தின் தலைச்சிறந்த மனிதர்கள், எந்த துறைகளில் இருந்தாலும் நாசரேத்திலிருந்து வந்த சாதாரண தச்சனாகிய இயேசுகிறிஸ்துவை சுற்றியே தங்களது தாலந்துகளை படைத்தார்கள். ஏன் மற்றவர்களுக்கு இல்லாத அந்த சிறப்பு, மூன்றறை வருடங்கள் மாத்திரமே ஊழியம் செய்த இயேசுகிறிஸ்துவுக்கு உண்டு என்றால், அவர் மாத்திரமே உலக மக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வந்தார். தத்துவங்களோ, வேதாந்தங்களோ, இசையோ, கவிதைகளோ சாதிக்க முடியாத ஆத்தும இரட்சிப்பை இயேசுகிறிஸ்து மாத்திரமே கொடுக்க முடியும். இயேசுகிறிஸ்து மாத்திரமே நம் வாழ்விலுள்ள பாவத்தின் கட்டுகளை அறுத்தெறிய முடியும், அதற்காகவே அவர் அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். அவர் சாதாரண தச்சன் அல்ல, வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர். அவரே மனுஷரூபமாய் காணப்பட்டு, அடிமையின் ரூபமெடுத்து,  நம்முடைய பாவங்களுக்காக பலியானார். அவருடைய இரத்தத்தினால் மாத்திரமே நமக்கு இரட்சிப்பு உண்டு.
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல,  தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து,  நித்திய மீட்பை உண்டுபண்ணினார் என்ற எபிரேயர் 9:12 ம் வசனத்தில் பார்க்கிறோம். வெள்ளாட்டுக்கடா அல்லது இளங்காளையினுடைய இரத்தம் நமது பாவத்தை போக்காது. இயேசுகிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
ஆகையால் எந்த தத்துவ ஞானிகளும், எந்த மத வல்லுநர்களும் ஏற்றுக் கொண்டாலும்,  ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்  இயேசுகிறிஸ்துவின் இரத்தம் அவர்களுக்காக சிந்தப்பட்டது. எந்த தலைசிறந்த கலைஞனாக இருக்கட்டும், எந்த தலைச்சிறந்த தலைவனாக இருக்கட்டும், அவர்களுடைய பாவங்களை போக்கும் ஒரே ஜீவாதார பலி இயேசுகிறிஸ்துவின் இரத்தமே. அதை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கே நித்திய ஜீவன் உண்டு. உலகிலே வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒரே ஒளி இயேசுகிறிஸ்துவே. உலகிலே வந்த எந்த மனிதனையும் இரட்சிக்கிற தேவன் இயேசுகிறிஸ்துவே. ஆமென் அல்லேலூயா!
பாவ மனித ஜாதிகளை
பாசமாய் மீட்க வந்தார்
பாவ பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
பாவமெல்லாம் சுமந்தார்
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிப்போலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

Saturday, 4 June 2011

“நான் பாத்திரன் அல்ல,”

John 3; 30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் பெருக வேண்டுமென்றால் “சுயம்”
அழிய வேண்டும்.

1.யாக்கோபு :

Genesis 32: 10. அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.

2. யோவான் :

Matthew 3: 11. மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

3.நூற்றுக்கு அதிபதி :

Matthew 8: 8. நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

4. பவுல் :

கலாத்தியர் 2; 20. கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
8:01am May 16
இயேசு கிறிஸ்து :” கிருபையும் சத்தியமும்”

யோவான் 1; 17. எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.

1. தேவனுடைய வார்த்தை :

யோவான் 1; 14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

2. பாவம் நிவிர்த்தியாகும்;

நீதிமொழிகள் 16: 6. கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
I யோவான் 1: 7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

3. கர்த்தருடைய பாதை.

சங்கீதம் 25: 10. கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.

4. சகாயம்.

சங்கீதம் 57 :3. என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.

5. ஜெபம்.

சங்கீதம் 115: 1. எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.

6. மேன்மை.

நீதிமொழிகள் 3: 3. கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

4. அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.

7. அஸ்திபாரம்.

சங்கீதம் 89 : 14. நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
சங்கீதம் 85: 10. கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்
எச்சரிப்பின் செய்தி : "இவர்களுக்கு ஐயோ! "

யூதா 1:11. இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

1. காயீனுடைய வழி.

காயீனை குறித்து நாம் ஆதியாகமம் நான்காவது அதிகாரத்திலே முழுவதுமாக வாசிக்கிறோம்.
காயீனுடைய வழி என்பது தேவனுடைய திட்டமாகிய இரச்சிசிப்புக்கு எதிர்த்து நிற்குதல்.
காயீனுடைய வழி என்பது "பெருமை" , காயீன் முதல் கொலையாளி அதுவும் மதரீதியாக,
சரித்திர பூர்வமாகவும்.

2. பிலேயாம் கூலி.

பிலேயாம் கூலி என்பது "பொருளாசையை" (விக்கிரகாராதனையான பொருளாசை )
குறிக்கிறது.
பிலேயாம் கூலி என்பது தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக செயல் படுவது.
பிலேயாமைக் குறித்து நாம் எண்ணாகமம் 22 முதல் 25 வரையிலுள்ள அதிகாரத்தில் பார்க்கிரோம்.

3. கோராவின் எதிர்ப்பு.

கோராவின் எதிர்ப்பு என்பது ஊழியத்திற்க்கு விரோதமாக செயல் படுவது.
கோராவின் எதிர்ப்பு என்பது தேவனுடைய அழைப்புக்கு விரோதமாக செயல் படுவது.
என்று பொருள்.
கோராவின் எதிர்ப்பை குறித்து நாம் எண்ணாகமம் 16ஆம் அதிகாரத்தில் பார்க்கிரோம்.